பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரின் மத்தியில் 10 பேரின் உடலங்களும் நல்லடக்கம்

மகியங்கனையில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கானோரின் கண்ணீரின் மத்தியில் இன்று மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 மகியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் மட்டக்களப்பு,கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீட்டில் இருந்துசென்ற ஜுட் ஹென்றிக்(48வயது)அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி(42வயது) அவரர்களது மகன் ஜு.ஹெய்ட்(19வயது),மகள் ஷெரேபி(10வயது) ஆகியோரும் உயிரிழந்துள்ள அதேவேளை கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த லிஸ்டர்(34வயது)அவரது மனைவி நிசாலி(27வயது)அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா,ஹனாலி ஆகியோரும் இவர்களின் மனைவி நிசாலியின் தாய்தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ்(56வயது), செல்pபியா(53வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் சடலங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம்,டச்பார்,சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விபத்தில் உயிரிழந்தவரின் 10 சடலங்கள் மட்டக்களப்பு புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இங்கு இறுதி அஞ்சலி வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி வழிபாடுகளின்போது பத்து பேரின் சடலங்களும் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதுடன் வழிபாடுகளை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரே தடவையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஆயிரக்கானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தியதுடன் பல்வேறு இடங்களிலும் நினைவு பதாகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தது.