குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 20பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 20பேர் தற்போது வைத்தியசாலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இன்று 11பேர் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் 28பேர் சிகிச்சைகளை நிறைவுசெய்து வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று 20பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினை தொடர்ந்து அன்றைய தினம் 69பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுதினம் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மொத்தமாக 73பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பிளாஸ்ரிக் சத்திசிகிச்சை நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டு நேற்று முதல் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியசட்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.22ஆம் திகதி காலை வரையில் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லையெனவும் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினைக்கொண்டே பாதுகாப்பினை வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.