நாட்டிய நாடக வடிவில் தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு அரங்கேறவுள்ளது.

கிழக்கிலங்கையின் வரலாறுச் சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு நாட்டிய நாடக வடிவில் அரங்கேறவுள்ளது.
         
மகா சிவராத்திரியை முன்னிட்டு சம்யோஜனா மற்றும் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இணைந்து நடாத்தும் “ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் நாட்டியாஞ்சலி” நிகழ்வானது இன்று கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

மீன் பாடும் தேனாடாகவும், செந்நெல்லும், செந்தமிழும், தேன்வாவியும் சிறந்து விளங்குவதாய் போற்றப்படும் மட்டுமானகரின் சிவபூமி என போற்றப்படும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக திகழும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கதை நிகழ்வானது நாட்டிய நாடக வடிவில்  கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிருவக நடன நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.திருமதி.உஷாந்தி நேஷகாந்தன் அவர்களின் நெறியாள்கையில் நிகழ்த்து வடிவில் கொக்கட்டி ஈசன் சரிதம் எனும் நாமத்தில் முதல்தடவையாக அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.

இன்று (04) திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், இதில் அனைத்து நல்லுள்ளங்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர் விழா ஏற்பாட்டுக்குழுவினர்.