வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பில் அழைப்பு –பேரணியிலும் பங்கொள்ளுமாறு அழைப்பு

வடகிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பானது அன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் தமது நியாயமாக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பானது ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் காரியாலயத்தில் நடாத்தியது.

கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அ.அமலநாயகி,அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.செல்வராணி,திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சரோஜா தேவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை வழங்கினர்.

சர்வதேச நாடுகளுக்கு நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காட்டிக்கொண்டு இலங்கை அரசாங்கமானது கடத்தல்களில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் இனவழிப்பு செயற்பாடுகளுக்கு துணைபோகும் நிலையுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை சர்வதேசத்தில் எடுத்துச்செல்லும் வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி வடகிழக்கில் கதவடைப் போராட்டத்தினையும் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலப்பகுதியில் இலங்கை விடயம் தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.இந்த நிலையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது எனக்கோரியும் சர்வதேசத்தின் நேரடி தலையீட்டை கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் கிழக்கு,தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,தொழில்நுட்ப கல்லூரி,ஆசிரிய பயிற்சி கல்லூhரி,ஆசிரிய சங்கங்கள்,பாடசாலை மாணவர்கள்,அரசசார்பற்று நிறுவனங்களின் இணையம்,ஊடக சங்கங்கள்,சமய தலைவர்கள்,இளைஞர் கழகங்கள்,விளையாட்டு கழகங்கள்,மாதர்,கிராம அபிவிருத்தி சங்கங்கள்,வர்த்தக சங்கங்கள்,அரசியல் கட்சி உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வர்த்தக சங்கத்தினர் வடகிழக்கில் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் தமது அரசியல்வேறுபாடுகளை களைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.