மட்டக்களப்பில் செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக உண்ணாவிரதம்

இலஞ்ச ஊழில்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது.

இலஞ்ச ஊழல் அற்ற சமூத்தினை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
மட்டக்களப்பு,செங்கலடி பிரதேச செயலாளர் மீதான இலஞ்ச,ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்யகோரும் வகையிலான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

குறித்த பிரதேச செயலாளர் குறித்த பகுதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ள நிலையில் குறித்த முறைப்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பிரதேச செயலாளர் செயற்படுவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

ஜனாதிபதி இலஞ்ச ஊழல்களை ஒழிக்கும் வகையில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே தாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் இங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.