தமிழர்களை நேசிக்கின்ற தமிழ் தலைமைகளுடன் இணைய தயாராகவுள்ளோம் - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு

எந்த தேர்தல் என்றாலும் கிழக்கு மாகாணத்தினை கிழக்கில் உள்ள தமிழர்களை நேசிக்கின்ற தமிழ் தலைமைகளுடன் இணைந்து செய்வதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில்  கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் உரையாற்றிய எஸ்.வியாழேந்திரன், 

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பானது பேராபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர். 

சிலருக்கு இதைச் சொல்வதற்கு பயம். காரணம் தங்கள் நல்லிணக்க உறவுகள் கெட்டுவிடும் என்பதாலாகும். தங்கள் உறவுகளை பற்றி மட்டுமே சிந்திக்கின்றனரே தவிர தங்களுக்கு வாக்களித்த இனம் சார்ந்து சிந்திக்கின்ற தன்மை இல்லாமல் போய்விட்டது. 

ஒரு இனத்தின் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான நான்கு தூண்களாக இருப்பவை நிலம்,மொழி,கல்வி,பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் போன்றவையாகும். இந்த நான்கு தூண்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலம், தமிழர்களின் கல்வி,மொழி,பண்பாடு பொருளாதாரம் ஆகிய நான்கு தூண்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. 

தமிழர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காணி சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்காக தாங்களாகவே வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இந்த அவலநிலை தொடருமானால் எங்களுடைய இனம் இன்னொரு இனத்திடம் கையேந்துகின்ற நிலைக்கு நாங்களே கொண்டுவிட்ட பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடுவோம். 

தமிழர்கள் தங்களுடைய கல்வியால் இலங்கை முழுவதையும் ஆண்ட சமூகமாகும். சகல துறைகளிலும் திணைக்களங்களிலும் எம்மவர்கள் இருந்தனர். ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அண்மையில் சகோதர முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் 2035ஆம் ஆண்டிலே இலங்கை முழுவதையும் நாங்கள் ஆள்வோம் எனச் சொன்னார். 

நான் எவ்வாறு என அவரிடம் வினவிய போது, இலங்கையில் இருக்கின்ற சகல திணைக்களங்களுடைய பெரும் பதவிகளிலே நாங்கள் தான் இருப்போம் என அவர் சொன்னார். அது அவர்கள் தங்களுடைய எதிர்கால சமூகம் சார்ந்து வகுக்கின்ற திட்டங்களாகும். அதை நோக்கி அவர்கள் காத்திரமாக தங்கள் சமூகத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்வகையில் நகர்ந்து செல்கின்றனர். 

ஆனால், எங்களுடைய சமூகம் இன்று அதற்கு மாறான சூழலில் சென்று கொண்டிருக்கின்றது. அதனை மாற்றியமைப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகத்தை நேசிக்கக்கூடிய தமிழ் தலைமைகளெல்லாம் ஓன்றிணைந்து பயணிக்கவேண்டிய சூழல் இருக்கின்றது. 
யாராது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைப்பற்றி சிந்தித்தால் அவர்களை இலகுவாக துரோகிகள் என்றும் கள்ளர்கள் என்றும் பச்சை குத்தி காட்டுகின்ற நடைமுறை இருக்கின்றது. 

ஆனால் நாங்கள் இதைப்பற்றி சிந்திக்கவில்லை. எமக்கு வாக்களித்த மக்களை பாதுகாக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அடுத்த தலைமுறையை நாங்கள் சரியான பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும். 
இந்த நிலையில் தான் கடந்த ஆட்சி மாற்றத்திலே கிழக்கு மாகாணத்திற்கு ஒரு அபிவிருத்தி அமைச்சு வேண்டும் என்பதற்காக பதினொரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொண்டேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதனை தொடரமுடியாமல் போய்விட்டது. 
மேல் மாகாணத்திற்கென தனியான அபிவிருத்தி அமைச்சு இருக்கின்றது. வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். 
நாங்கள் அதற்கு முட்டுக்கட்டை போடவில்லை. தென்னாசியாவிலே எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சிப் பிரதமரை பாதுகாத்திருக்கின்றோம். ஆதரவை வழங்கியிருக்கின்றோம். 

அப்படியிருக்கையில் கிழக்கு மாகாணத்திற்கு அபிவிருத்தி அமைச்சை கேட்டபோது அது கணக்கில் எடுக்கப்படவில்லை. பின்னர் சுவாமிநாதனை வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமித்தபோது கிழக்கு மாகாணத்திற்கும் அபிவிருத்தி அமைச்சரை கேட்டோம். அப்போதும் அது கணக்கில் எடுக்கப்படவில்லை. 

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்திலே வடமாகாணத்திற்கு தனித்தனி அமைச்சுகளை உருவாக்கி நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி செய்வதுபோல கிழக்கிற்கும் அமைச்சை உருவாக்க வேண்டுமென நான் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கூறினேன். 
அந்தக் கேள்விக்கமைய 2018 ஒக்டோபரில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திலே கிழக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொண்டேன். 

கிட்டத்தட்ட ஆறு வாக்கெடுப்புகளுக்கு கையுயர்த்தியுள்ளனர். நான் கையுயர்த்தவில்லை. ஒருசில வாக்கெடுப்புகளுக்கு சிவசக்தியானந்தனும் கையுயர்த்தவில்லை. அப்போது அபிவிருத்திக்காக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 
பின்பு இடைப்பட்ட காலத்தில் மகிந்த ராஜபக்ஸ சார்பாகவோ,ரணில் விக்ரமசிங்க சார்பாகவோ நாங்கள் யையுயர்த்தவில்லை. 

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கம்பிரலிய நிகழ்ச்சித் திட்டத்தினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. எனக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கும் அந்த நிதி வழங்கப்படவில்லை. இப்போதுதான் எனக்கு புரிகின்றது தங்களது கட்சியை பாதுகாத்ததற்காக ஒரு சன்மானமாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 

இப்போதுதான் அதனை எனக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. கிழக்கு மாகாணம் இன்று முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சராக நாட்டின் பிரதமரே இருக்கும்போது கிழக்கு மாகாணம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 
கிழக்கு மாகாணத்தினையும் இங்குள்ள தமிழ் மக்களையும் இங்குள்ள நில வளங்களையும் எங்களது உயிருக்கும் மேலாக நேசிக்கின்றோம். 


எதிர்வரும் மாகாணசபை தேர்தல் என்றாலும் நாடாளுமன்ற தேர்தலானாலும் எந்த தேர்தல் என்றாலும் கிழக்கு மாகாணத்தினை கிழக்கில் உள்ள தமிழர்களை நேசிக்கின்ற தமிழ் தலைமைகளுடன் இணைந்துசெல்வதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம். நான் பிரதேசவாதம் பேசவில்லை. ஆனால் எமது மாகாணம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.