மட்டக்களப்பில் மேலும் 12 வீட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் நடப்பட்டது.

அனைவருக்கும் நிழல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடு அற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான “அனைவருக்கும் நிழல்” திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும்  மாதிரிக் கிராமங்களுக்கு இணையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய  மாதிரிக் கிராமங்களுக்கான  அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த (3) ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டில்  “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண” கம்உதாவ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள 12 மாதிரிக் கிராமங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது  வீடமைப்புநிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களது ஆலோசனைக்கு அமைவாக  மாவட்டத்தின் வவுணதீவு, வாகரை, ஏறாவூர்பற்று மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெற்றது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இம் மாதிரிக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 25 வீடுகள் அடங்குவதுடன் சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேஷன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்,  வீடமைப்பு அதிகார சபையின் சிரேஸ்ட  முகாமையாளர் க.ஜெகநாதன், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகாத்தர்கள்  அடங்கலாக  எஸ்.பீ.ஜீ அமைப்பின் பிரதேச தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.