என்னுடைய கவிதைகளை திருடியுள்ளார்கள். அதையிட்டு எனக்கு கவலை இல்லை.




(சசி துறையூர் )

தொடர்ச்சி.........

உங்களை பற்றிய அறிமுகம்  தரமுடியுமா?

நிச்சயமாக எனது பெயர் அழகையா மயூறன் . 

 இருந்தபோதும் அருண்மயூ எனும் பெயரே தற்போது பரவலாக அனைவருக்கும் தெரிந்த பெயராகவுள்ளது,  தந்தையார் பெயர் அழகையா காலமாகிவிட்டார்,  தாயார் மணியம்மா.

 உடன் பிறப்புக்கள் மூன்று , இரண்டு அக்கா,  ஒரு தம்பி. மூத்தவர் மங்கையற்கரசி , இரண்டாவதாக மதிவதனி அடுத்ததாக நான் இளையவன் எனது தம்பி மதுஷன்

மூத்த அக்கா மங்கையற்கரசி திருமணமாகவில்லை அம்மாவோடு இருக்கின்றார் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.

இளைய அக்கா மதிவதனி
திருமணமாகிவிட்டது அவர் வீட்டிலேயே இருக்கின்றார்.

தம்பி மதுஷன் வாகனம் பழுதுபார்க்கும் படிப்பைப் படித்து அத்துறையில் வேலை செய்கிறார்.

எனக்கு இப்போது திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது மனைவி பெயர் ருஷாந்தினி எனது கவிதைகளுக்கும் எனக்கும் தூண்டுதலாய் இருப்பவள்.

கல்வி கற்ற பாடசாலை ?

கல்வி கற்ற பாடசாலை என்பதை விட பாடசாலைகள் என்பதே  சரியாக அமையும்.

ஆம் தரம் 4 வரை எனது கிராமத்து பாடசாலை காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலயத்திலும் அதன் பின்னர் 5 தொடக்கம் 10 வரை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திலும் பின்னர்  சாதாரண தர பரிட்சை பழையபடி காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலயத்திலும் உயர்தர  கலைத்துறை படிப்பை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் கற்றேன்.

கல்வி கற்கும் காலத்தில் சிறு வயது முதல் எனது இலட்சியம் ஆசிரியராவதே.
தற்போது சவுதி அரேபியாவில் அரச நிறுவனமொன்றில் சேமித்து வைக்கவின்றி குடும்பத்தைச் சமாளிக்கப் போதுமான சம்பளத்திற்கு வேலை செய்கின்றேன். 

ஆடி மாதம் தாயகம் திரும்ப உத்தேசம், இறைவன் சித்தம் எப்படியோ தெரியாது .


உங்கள் கவி எழுதும் முயற்சி  எப்படி ஆரம்பம்?

கவி எழுதும் சிறிய திறமை என்னுள் இருப்பதை சுயமாகவே உணர்ந்தேன் .

 தரம் 6ல் கூட சில கவிதைகள் எழுதியுள்ளேன் ஆனால் அவற்றை நான் அப்போது சேர்த்து வைக்கத் தறிவிட்டேன்.

அன்று நான்  எழுதிய முதல் கவிதையின் தலைப்பு எனது பேனா  எனத் தலைப்பிட்டு எழுதியது. 

 கவிதையின் தலைப்பு மாத்திரமே நினைவிருக்கிறது.

அந்த நேரம் சரியான களம் ஏதும் அமையவில்லை ஊர்க் கோவில் திருவிழாக்களில் நாடகம் இயற்றி நண்பர்களை வைத்து அரங்கேற்றுவது பாடசாலை மேடைகளில் கவிதை பாடுவது எனச் சிறு சிறு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டேன் .

பின்னர் பழுகாமம் விபுலானந்தர் சிறுவர் இல்லத்தில்  படித்த நாட்களில் எனது கவிதைகளை ஊக்குவித்து வற்புறுத்தி எழுத வைத்தவர் கவிஞர் தணிகாசலம் ,

 இவரை  அப்பா என்றே நான் இன்றும் அழைக்கிறேன் நெஞ்சுரம் தந்தவரல்லவா இன்றும் என்றும் நன்றி மறவேன்.

கவி எழுத நோக்கம் ?
அதனால்  உங்களுக்கு  கிடைத்த வெகுமானம்?

கவிபாடும் நோக்கம் என்றால் சமூகத்திற்குத் தேவையானதும் சமூக அக்கறையோடும் என் மனதின் எண்ணங்களை பிறர்  ரசிக்கும்படியாக விதைத்து விட்டுச் செல்லுதல் மாத்திரமே .

  இதனால் கிடைத்த வெகுமானம் என்பது நல்ல ரசிகர்களின் பாராட்டுக்களும் புத்தி ஜீவிகள் பெரியவர்கள் பலரின் பாராட்டும் அன்பும். 

 அத்தோடு எனது கவிதையை ரசித்த ஒரு ரசிகர் வெளிநாட்டில் இருந்து அன்புப் பரிசாக 50000 ரூபாய் இலங்கைப் பணம் அனுப்பி வைத்தார் நான் வேண்டாமென்று கூறியும் அன்புப் பரிசு எனக் கூறி அனுப்பி வைத்தார் .

தென் இந்திய முகநூல் கவிதைக் குழுமங்களில் இருந்து
கவிச் சிற்பி
இளங்கவி
கவிச்சாகரம்
பாடலாசிரியர்
போன்ற விருதுகளும் வாங்கியுள்ளேன்.

அடைய நினைப்பது என்றால் என்னால் முடிந்ததை எனது சமூகத்துக்கு சமூக நற்கருத்துக்களை விதைத்து விடுதல் மாத்திரமே அதுவும் பாமரனும் ரசிக்கும் ஏற்கும் விதமாக.

நீங்கள் எழுதியதில் உங்களை கர்ந்த  கவிதை எது?

        கழிவுகள் தலைப்பில் எழுதிய கவிதை
    
கிழிந்து போன சேலையது
குழந்தை தூங்கப் போர்வை - கையில்
அழிந்து போன ரேகைகூட
ஆயுள் பார்க்கத் தேவை - இலை
உதிர்ந்து போன பூமரமும்
உறுதி செய்யும் விறகை - நிலை
உடைந்து போன சாளரமும்
ஊஞ்சல் கட்டும் பலகை - தினம்
உண்டு வீசும் சாதம்கூட
ஒரு சிலரின் அமிர்தம் - பலர்
உடுத்து வீசும் ஆடைசிலர்
உடல் மறைக்கும் புனிதம் - அட
வேசம் இன்றி நாய்கூட
வீடு காக்கும் தினமும் - நாம்
வீசுகின்ற குப்பை பயிர்
வேர் பிடிக்க உதவும் -பட்டுக்
குஞ்சம் கிழி சட்டையது
குரங்குப் பொம்மை ஆடை -நாம
குடித்து வீசும் கோம்பைகூட
குருவி நீந்தும் ஓடை - இங்கு
கழித்து வைத்த கல்லுக்கூட
கட்டிடத்திற் குதவும் - இதை
கடைசி வரை நமது மனம்
கண்டு கொள்ளத் தவறும் - நீங்கள்
கடந்து செல்லும் இவ்வரிகள்
கழிவு போலத் தோன்றும் - நன்கு
கவனித்த ஒருத்தர் மனம்
கவிதை எனப் போற்றும்.

காரணம் தெரியவில்லை பிடித்திருக்கிறது .

உங்களை மனம் கவர்ந்த கவிஞர்?

எனக்குப் பிடித்த கவிஞர் என்றால் கவிப்பேரரசு வைரமுத்து வைக் கூறுவேன். 

 பாமரருக்கும் புரியும்படி புதுக்கவிதை படைப்பதாலும் ஈர்க்கின்ற இசை நய வாசிப்பாலும் அவரது கவிதைகள் மிக பிடிக்கும் .

கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளில் பிடித்தது?

வைரமுத்து கவிதையில் தோழிமார் கதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை பலநூறு தடவை கேட்டு இரசித்துள்ளேன்.

பத்திரிகைகளில் உங்களது கவிதைகள் வெளிவரவில்லையா?

இல்லை நான் எந்தப் பத்திரிகைகளுக்கும் எழுதவில்லை.
உங்களது கவிதைகள் பல அல்லது சில வேறொருவரால் அவரது பெயரில் பத்திரிகையில் வெளிவந்திருக்ககூடுமே?

தெரியவில்லை ஆனால் சிலர் எனது கவிதைகளை சில வலைத் தளங்களில் கண்டதாகக் கூறினார்கள் அதில் எனக்கு மகிழ்ச்சியே வருத்தமோ இல்லை
அதனால் அவற்றை ஆராயாமல் விட்டு விட்டேன்.


ஈழத்தில் பிடித்த கவிஞர்/எழுத்தாளர்?

கவிஞர் தணிகாசலம் அப்பா. நான் அவரை அப்பா என்றே கூறுவேன் அவரது நாட்டுக் கூத்து வில்லுப் பாட்டுப் போன்றவற்றில் வரும் சில வரிகளைக் கண்டு சிறுவயதில் இருந்தே அவர்போல் முயற்சித்ததுண்டு.

உங்களது பொழுதுபோக்கு?

நண்பர்களோடு அதிக நேரம் செலவிட மிகவும் விரும்புவேன்.













நன்றி .... 

தொடரும்