மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

முச்சக்கர வண்டி சாரதிகள் மாநகரசபையில் பதிவுசெய்யவேண்டும் -மீண்டும் வலியுறுத்தும் முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் மட்டக்களப்பு மாநகரசபையில் தம்மை பதிவுசெய்துகொண்டு சேவையில் ஈடுபடவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும் மட்டக்களப்பு மாநகர முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகர ஆணையாளர் க.சித்திரவேல்,மநகரசபை உறுப்பினர்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் சட்டதிட்டத்தின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டுவருவதாகவும் அதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில்சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் தம்மை மட்டக்களப்பு மாநகரசபையில் பதிவுசெய்துகொள்ளவேண்டும் என மாநகர முதல்வர் வலியுறுத்தினார்.

அத்துடன் பதிவுசெய்யப்படும் முச்சக்கர வண்டிகளில் மாநகரசபையின் இலக்க இலச்சினை பொறிக்கப்படும் எனவும் அத்துடன் பாடசாலைசேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளில் அந்ததந்த பாடசாலையின் இலச்சினைகள் இலக்கங்களுடன் பொறிக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் மீட்டர்களை பொருத்துவதற்கும் சாரதிகள் தங்களை இலகுவில் அடையாளப்படுத்தும் வகையில் சீருடைகளை அணியும் வகையிலான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் நியாயமானதும் அச்சமின்றிய வகையில்தமது தேவைகளை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை மாநகரசபை மேற்கொள்ளும்போது அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.