மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை

நல்லிணக்க அபிவிருத்தியை பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்கள் கையிலெடுத்து மேற்கொண்டுவருவதாக ஆரம்பக்கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஆரம்பக்கைத்தொழில்களை மேம்படுத்தி அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பக்கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் இந்த நடவடிக்கைகள் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் காணப்படும் வளங்களைக்கொண்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரை ஊக்குவித்து அவர்கள் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக்கூட்டம் இன்று சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், ஆரம்பக்கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சின் விவசாய,தொழில்முறை நவீனப்படுத்தல் பிரிவின் திட்டப்பணிப்பாளர் ரோகணகமகே,சமுர்த்தி திட்ட பணிப்பாளர் வெலப்புலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயம்,மீன்பிடி,கால்நடை,மூலிகை செடி வளர்ப்பு,பழவகைகள்,மரக்கறி செய்கை,குளிர்பானங்கள் என பல்வேறுபட்ட உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மேலும் உதவிகளையும் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு மானியம் அடிப்படையிலும் கடன் அடிப்படையிலும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

நாட்டில் முன்னெக்கப்படும் கம்பிரலிய,கிராம சக்தி,என்ட பிரைஸ் சிறிலங்கா நிகழ்ச்சி திட்டங்களுக்கு இணைவாக இந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த எதிர்வரும் மாத நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் அமைக்கப்படவுள்ளதுடன் விசேட வீதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.