மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பம்;

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவையொன்று நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு முதல் விமான சேவையாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றமும் செரண்டிப் ஏயார் விமான சேவை நிலையமும் இணைந்து இந்த சேவையினை இன்று காலை ஆரம்பித்துவைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் நன்மை கருதியும் வெளிநாடுகளில் இருந்துவரும் உள்ளூர் வாசிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருவதற்கு பெருமளவு நேரத்தினை வீண்விரயம் செய்யவேண்டிய நிலையில் இந்த விமான சேவை ஊடாக ஒரு மணி நேரத்தில் மட்டக்களப்புக்கு வருகைதரகூடியதாக இருக்கின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வானது இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,அலிசாகீர் மௌலானா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

குறித்த விமான சேவையின் மூலம் கிழக்குமாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிப்பாதையினை நோக்கி செல்லும் சந்தர்ப்பம் ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறைந்த விலையில் விமான சேவையினை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் இவ்வாறான விமான சேவைகள் மூலம் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் இந்த விமான சேவை நடைபெறும் எனவும் காலை 10,11,11.30,பிற்பகல் 3.30மணி ஆகிய நேரங்களில் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.