கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று பகல் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பும் கவன ஈர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.

நோயாளர்கள்,பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இந்த போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக நடைபெற்றது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு நிலுவைகள் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லையெனவும் பல தடவைகள் இது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் நிர்வாகம் தங்களை ஏமாற்றிவருவதாக தாதியர்கள் தெரிவித்தனர்.

மூன்று வருடமாகியும் ஏன் தாமதம்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்,ஏன் இன்னும் மௌனம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஏனைய வைத்தியசாலைகளில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டும் இந்த நிலை காணப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இந்த பிரச்சினை நாடளாவிய ரீதியில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு விரைவில் தீர்த்துவைக்கும் என சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.கலாஞ்சரஞ்சனி தெரிவித்தார்.