மட்டக்களப்பு எல்லைப்பகுதிக்குள் அம்பாறை மாவட்ட கழிவுகள் -பெரியகல்லாறில் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிக்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்டத்தின் கழிவுகளை கொட்ட எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கல்முனை மாநகரசபையினால் இன்று காலை குப்பைகள் கொட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனாலேயே இந்த பதற்ற நிலமையேற்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.கணேசன் மற்றும் கல்லாறு பிரதேச மக்கள் குறித்த பகுதியில் அம்பாறை மாவடட்ட குப்பைகள் கொட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பெரியகல்லாறு பகுதியில் சுனாமி அனர்த்தத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது கல்முனை நகரசபையினால் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினையும் பொருட்படுத்தாமல் இந்த நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த திண்மக்கழிவு முகாமைத்து நிலையத்தினை அகற்றுமாறு கடந்த காலத்தில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய எல்லைப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிசபை மேற்கொள்வது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அனைத்து எதிர்ப்பினையும் மீறி இன்று பெரியகல்லாறு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் கல்முனை மாநகர முதல்வரும் வருகைதந்து மக்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய பகுதிகளை இணைத்து தமது பிரதேச எல்லையினை வர்த்தமானிப்படுத்தும் நடவடிக்கைகளை கல்முனை மாநகரசபை மேற்கொண்டுவருவதாகவும் அவை தடுக்கப்பட்டு தமது எல்லைப்பகுதியை உரியவாறு வழங்கவேண்டும் என பெரியகல்லாறு மக்கள் மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.