மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கவேண்டாம் என போராட்டம்

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடை,மற்றும் நொச்சிமுனை பிரதேச மக்கள் இன்று காலை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

உப்போடையில் உள்ள தனியார் விடுதிக்கு மதுபான விற்பனை அனுமதியை வழங்கவேண்டாம் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்லடி உப்போடை,மற்றும் நொச்சிமுனை பிரதேச மக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கல்லடி உப்போடை,நொச்சிமுனை பகுதி பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களைக்கொண்டதுடன் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் கொண்ட பகுதி என்பதுடன் பல பாடசாலைகளும் சூழ்ந்த பகுதியென்பதன் காரணமாக அப்பகுதியில் மதுபான விற்பனைக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் குறித்த பகுதியானது சுவாமி விபுலானந்தர் வாழ்ந்த பகுதியாகவும் அவரது சமாதியினைக்கொண்ட பகுதியாகவும் உள்ள நிலையில் சுவாமி இராம கிருஸ்ண மிசனும் அமைந்துள்ளதுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் உள்ள காரணத்தினால் அப்பகுதியில் எந்தவித மதுபான நடவடிக்கைகளையும் அனுமதிக்கமுடியாது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான தமது எதிர்ப்பினை மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரியிடமும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மக்களின் எதிர்ப்பினை தாம் குறித்த திணைக்களங்களுக்கு தெரிவிப்பதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.