தேசிய ரீதியில் சாதனை படைத்த புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் சாதனை

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் 14வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமானது.

இந்த சுற்றுப்போட்டியில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 அணிகள் பங்குகொண்டன.

நேற்று மாலை இறுதிப்போட்டி மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் திருகோணமலை புனித ஜோசப்கல்லூரி அணியும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி அணியும் மோதிக்கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 56-37 என்ற ரீதியில் புள்ளிகளைப்பெற்று புனித மைக்கேல் கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் நடைபெற்று சுற்றுப்போட்டியில் முதல் இடத்தினை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி அணியும் இரண்டாம் இடத்தினை திருகோணமலை புனித ஜோசப்கல்லூரி அணியும் மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக்கேடயங்களும் சான்றிதழ்களுமு; வழங்கப்பட்டதுடன் சிறந்த வீரர்களுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன.