கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

எமது பகுதிக்குள் வந்து எமக்கு அச்சுறுத்தல் விடுத்தார் கல்முனை மாநகர முதல்வர் –பிரதேசசபை உறுப்பினர் முறைப்பாடு

கல்முனை மாநகர முதல்வர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கோரி மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரத்தின் வீதியூடாக கல்முனை மாநகரசபை கழிவுகளை கொண்டுசெல்வதன் காரணமாக பிரதேச மக்கள் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

பெரியகல்லாறு ஊர்வீதியுடாக கொண்டுசென்று பெரியகல்லாறு பொதுமயான வீதியுடாக கல்முனை மாநகரசபையினால் கழிவுப்பொருட்கள் குப்பைகள் டரக்டர் மற்றும் கன்டர் வாகனங்களில் கொண்டுசெல்வதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் வீதிகளில் அழுக்குகள் வீழ்கின்றது.

இது தொடர்பில் பல தடவைகள் கல்முனை மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான அழுத்தங்களை எனக்கு வழங்கிவருகின்றனர்.

இந்த நிலையின் இன்று காலை குறித்த வீதியூடாக வந்த கல்முனை மாநகரசபையின் கழிவுகளை எமது வீதியூடாக செல்லமுடியாது என திருப்பியனுப்பினேன்.அந்தவேளையில் பெருமளவான பெரியகல்லாறு பிரதேச மக்களும் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது அங்குவந்த கல்முனை மாநகரசபை முதல்வர் பெரியகல்லாறு பகுதியூடான வீதி தமக்கு சொந்தமானது எனவும் அதனை தடுத்தால் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என மிரட்டினார்.

எமது பகுதிக்குள் வந்து தமது பகுதியென எழுந்தமானமாக கல்முனை மாநகர முதல்வர் பிரகடனப்படுத்தியதை மக்கள் பிரதிநிதியென்ற வகையில் நான் எதிர்த்தேன்.

குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதி முற்றுமுழுதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியாகவும் உள்ள நிலையில் கல்முனை பொலிஸார் வருகைதந்து தம்மிடம் விசாரணை நடாத்தியதாகவும் உறுப்பினர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இரு சமூகங்களையும் குழப்பும் வகையில் கல்முனை மாநகர முதல்வரின் நடவடிக்கைகள் அமைவதாகவும் தெரிவித்த அவர் பெரியகல்லாறு மக்களின் பிரச்சினையை உரிய அதிகாரிகள் தீர்த்துவைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.