மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய முச்சக்கர வண்டி சாரதிகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர முச்சக்கர வண்டி சாரதிகள் மட்டக்களப்பு நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

மட்டக்களப்பு ஓட்டோ சாதிரிகள் நலன்புரிச்சங்த்தினால் இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிலும் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தினை முச்சக்கர வண்டி சாரதிகள் நடாத்தினர்.

கடந்த 30வருடமாக மட்டக்களப்பில் தமது சங்கம் செயற்பட்டுவரும் நிலையில் அதன் செயற்பாட்டினை குழப்பும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரும் ஆணையாளரும் செயற்படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்க தலைவர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு எந்த இடையுறுகளும் பாதிப்புகளும் ஏற்படாத வகையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்;டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததடன் மாநகர முதல்வரின் கொடும்பாவியினையும் கொண்டுசென்றனர்.

காந்திபூங்காவில் நடைபெற்ற ஆர்;ப்பாட்டத்தினை தொடர்ந்து ஊர்வலமாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் அங்கிருந்து மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர்.
அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவரினால் மகஜர் ஒன்றும் கையளிக்க்பட்டது.