வீட்டில் இருந்த நெல்லுமூடையினை திருடிய கும்பல் -இளைஞர் மீதும் தாக்குதல் -புதுக்குடியிருப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகளை திருடிய கும்பல் ஒன்று அங்கிருந்த இளைஞர் ஒருவரையும் கடுமையாக தாக்கிவிட்டுச்சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை புதுக்குடியிருப்பில் பிரதான வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை 1.45மணியளவில் வயல் அறுவடைக்கு சென்றிருந்த குறித்த வீட்டு உரிமையாளரின் மகன் வீட்டுக்கு வந்துள்ளார்.அதன்போது மூன்று பேர் வீட்டின் முன்பகுதியில் இருந்த நெல்மூடைகளை வாகனமொன்றில் ஏற்றுவதை கண்டு அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபர்கள் இளைஞனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்த 15நெல்மூடைகளை திருடிச்சென்றுள்ளனர்.

சிறிய கன்டர் வாகனத்தில் வந்த நபர்களே இந்த துணிகர கொள்ளைச்சம்பவத்தினை நடாத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வந்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் தாக்குதலுக்குள்ளான இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.