வேலையற்றவர்களுக்கான தொழிற்சந்தை –மட்டக்களப்பிலும் நடாத்த தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் விசேட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் பிரதமர் ரணில்விக்ரசிங்கவின் உறுதிமொழிக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மாபெரும் தொழிற்சந்தையினை மட்டக்களப்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் இணைந்து கிழக்கு பல்கலைகழகத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி இந்த தொழிற்சந்தையினை ஏற்பாடுசெய்துள்ளது.

இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தில் அதன் மாவட்ட முகாமையாளர் க.குகதாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் உட்பட தொழில்வழங்குனர்கள்,பல்கலைக்கழக,கல்லூரி முக்கியஸ்தர்கள்,நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த தொழிற்சந்தை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் தொழில்வாய்ப்பற்று உள்ள ஏனையவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கமுடியும் என இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.