முகாமைத்துவ உதவியாளர்கள் 13அம்ச கோரிக்கையுடன் மட்டக்களப்பில் போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்களின் சேவையின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி முகாமைத்துவ உதவியாளர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்துடன் ஒன்றினைந்து கவனயீர்ப்பு போராட்டம் இணைந்து இந்த போராட்டத்தினை நடாத்தினர்.
 
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்பாக இருந்து ஆரம்பமான பேரணியில் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் காந்தி பூங்காவிற்கு முன்பாக வந்தடைந்து அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாளேந்திரன் மற்றும் ஜனாதிபதியின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கோல்டன் பெர்ணான்டோ ஆகியோரிடம் 13 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாவட்ட செயலகத்தை  நோக்கி பேரணியாக சென்றவர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க  திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களிடமும் மகஜர் ஒன்றினை கையளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இம்மாதம் 21 ஆம் திகதி அம்பாரையிலும், 27 ஆம் திகதி கொழும்பிலும் சுகயீன லீவு போராட்டங்கள் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.