சிறந்த நகரை உருவாக்கவேண்டுமானால் மட்டக்களப்பு மாநகரசபைபோல் செயற்படவேண்டும் -ஒஸ்லோ பிரதி மேயர் புகழ்

சிறந்த நகர் ஒன்றை உருவாக்கவேண்டுமானால் தற்போது மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள்போல் திட்டங்களை வகுக்கவேண்டும் என ஓஸ்லோ மாநகரின் பிரதி முதல்வர் ஹம்சாயினி குணரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு இன்று காலை விஜயம்செய்த ஓஸ்லோ மாநகரின் பிரதி முதல்வர் ஹம்சாயினி குணரெட்னம் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தார்.

இவருக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்,மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்ததை தொடர்ந்து மாநகரசபை முதல்வருடனான சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பினை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையில் தனது விஜயத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் நட்டத்துடன் மாநகரசபையினையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றதுடன் அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மட்;டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஓஸ்லோ மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த ஒஸ்லோ பிரதி முதல்வர்,

மட்டக்களப்பு மாநகரசபையானது உண்மையிலேயே சிறப்பான முறையில் செயற்பட்டுவருகின்றது.இங்கு கலந்துரையாடியதற்கு அமைய வருங்காலத்தில் சிறந்த நகர் ஒன்றை உருவாக்கவேண்டுமானல் தற்போது மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள்போல் திட்டங்களை வகுக்கவேண்டும்.

எமது இயற்கையினை பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் பாராட்டக்கூடியது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது பிள்ளையினை பெறுபவர்களுக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கையானது உண்மையில் சிறந்த ஒரு யோசனையாக நான் பார்க்கின்றேன்.மாநகரசபையினை சிறந்ததுறையில் முன்கொண்டுசெல்லவேண்டும் என்ற சிந்தனையிருக்கும்போதே இவ்வாறான யோசனைகள் முன்வைக்கமுடியும்.