கிழக்கு ஆளுனர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தாலுக்கு அழைப்பு

கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதியே!பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் நாளை வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்றையும் கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் அமைப்பின் பெயரில் ஒட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களுடன் பண்மைத்துவ சமூகம் ஒற்றுமையுடன் வாழும் எமது கிழக்கு மாகாணத்தின் சுமுக நிலையினையும் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் சிதைக்கும் நோக்கம்கொண்ட புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை உடனடியாக பதவி நீக்கம்செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை வாகனங்கள் ஓடாமலும், கடைகள், அரச அலுவலகங்கள்,பாடசாலைகள்,தனியார் நிறுவனங்களை பூட்டியும் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறும் எமது கிழக்கு மாகாண மக்களின் அமைதியை பாதுகாக்க மூன்று மாவட்டங்களிலும் எதிர்ப்பினை காட்டுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.