கழிவகற்றல் செயற்பாடுகளில் பாரிய நெருக்கடி –மட்டு.முதல்வர் கவலை

மட்டக்களப்பு மாநகரசபை கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

கழிவகற்ற தொடர்பில் மாணவர்கள் மத்தியில் அறிமுகம்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நோக்காக கொண்டு மாநகரசபையினால் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீசித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் திருமதி சசிகலா,மாநகரசபையின் சமூகமேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள 12 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நடவடிக்கைகளை மாநகரசபை மேற்கொண்டுள்ளது.