சமய, சமூக தொண்டர் கலாபூசணம் ஞானமாணிக்கம் காலமானார்!

கல்முனை பிரதேசத்தில் சமய, சமூகத் தொண்டுகள்,  மாணவர்களிடம் கலை, கலாசார ஈடேற்றத்திற்கும் பல வழிகளில் பங்களிப்பு செய்தவரும், கலைஞரும், எழுத்தாளரும், இலக்கியவாதியுமான கலாபூசணம் வை. ஞானமாணிக்கம் அவர்கள் 12.01.2019 இன்று பாண்டிருப்பில் காலமானார்.
இப்பிரதேசத்தில் மாணவர்களிடம் அறநெறி கல்வியை ஊட்டுவதில் அளப்பெரிய பங்காற்றியவர், பாண்டிருப்பு நாவலர் அறநெறிப்பாடசாலையின் தலைவராக இறுதிவரை இருந்து அதன் வளர்ச்சிப்படியின் முக்கிய மூலகர்த்தாவாக திகழ்ந்தவர்.
தமிழர் கலாசாரங்கள், பண்பாட்டு விழுமியங்களை மாணவர்களிடம் ஊட்டுவதில் தனது நேரங்களை அர்ப்பணித்து சேவை செய்த ஒரு சிறந்த சமூக சேவகர், வில்லுப்பாட்டு, நாட்டுக் கூத்துக்கள், மேடை நாடகங்கள் இயற்றி மாணவர்களை பயிற்றுவித்து பல மேடைகளில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தியவர்.
சிறந்த பேச்சாளர், ஆலயங்களில் தேவாரம் பன்னிசையுடன் பாடுதல், ஆன்மீக உரையாற்றுதல், ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்தல் போன்ற பல வழிகளில் சமயத்தொண்டாற்றியவர், அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட எல்லோராலும் ஐயா என்று அன்போடு அழைக்கப்படும் ஞானமாணிக்கம் ஐயா இப்பிரதேசத்திற்கு செய்த சேவைகள் இப்பிரதேச மக்களால் என்றும் மறக்கமுடியாததே அன்னாரின் இழப்பு இப்பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.
இவரின் சமயத் தொண்டு, கலைத் தொண்டுகளுக்காக இந்து கலாசார திணைக்களம்,  மாகாண கலாசார திணைக்களம், பல்வேறு பொது அமைப்புக்களால் சாமஸ்ரீ,காவியச் சுரவம்,சைவ வித்தகர்,அரச சாகித்ய விருது என   பல விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
எழுத்தாளராக,இலக்கியவாதியாக,பல்துறைப் புலமையும் மும்மொழித் தகமையும் கொண்டவராகவும் திகழ்ந்த  இவர் தனது தபாலதிபர் பதவியின் முதலாவது கடமையை இங்கினியாகல பிரதேசத்திலும், இறுதியாக கல்முனையிலும் சேவை செய்தவர்.
குறிப்பிட்ட காலம் பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் தலைவராகவும் இருந்தவர்
இவர் தனது மனைவி மற்றும் ஒரு ஆண், மூன்று பெண் பிள்ளைகளைகளோடு அமைதியே உருவான ஒருவராக வாழ்ந்து வந்தவர். இவர் காரைதீவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் அவர்களின் மனைவியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பு – இறுதி கிரியைகள் 13.01.2018  ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் இடம்பெறும்