இலங்கையில் 20 ஆயிரம் கிராமங்களை உருவாக்க நடவடிக்கை –அமைச்சர் சஜீத்

இலங்கையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டபின்னர் அந்த ஆலயத்தினை உடைக்க வருபவர்களுக்கு அதனை உடைப்பதற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

“செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண” கம்உதாவ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தும்பங்கேணியில் இளைஞர் விவசாய திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட “ஆனந்தபுரம்” 161 ஆவது மாதிரிக் கிராமம் இன்று (28) திங்கட்கிழமை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால்  மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலிமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இம் மாதிரிக் கிராமத்தில் 25 வீடுகள் அடங்குவதுடன் அவற்றிற்கான உரிமங்கள் அவர்களிடம்  கையளிக்கப்பட்டதுடன்,  இதற்கு இணையாக சுயதொளிலாளர்களுக்கு கடனுதவிகள் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் என்பன இதன்போது அமைச்சரினால் வழங்கிவைக்கப்ப்பட்டது.

எஸ்.பி.ஜீ அணியின் அமோக வரவேற்பின் மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி,ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி,சிறப்பு அதிதிகளாக உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.