காத்தான்குடியில் கொத்துரொட்டிக்குள் அரணை –சீல்வைக்கப்பட்ட ஹோட்டல்

காத்தான்குடியில், இரவு நேர ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிக்குள், அரணையொன்று கிடந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த ஹோட்டல், சீல் வைத்து மூடப்பட்டதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி - ஆறாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள குறித்த ஹோட்டலில், சனிக்கிழமை இரவு, கொத்துரொட்டி பார்சலொன்றை வாங்கிச்சென்ற நபரொருவர், அதற்குள் அரணையொன்று இறந்து கிடப்பதைக் கண்டு, அது தொடர்பாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், குறித்த ஹோட்டலுக்குச் சென்ற பொதுச் சுகாதார அதிகாரிகள் குழு, ஹோட்டலை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், ஹோட்டலை மூடிச் சீல் வைத்துள்ளனர்.

அத்துடன், குறித்த ஹோட்டலில் இருந்து, பழுதடைந்த எண்ணெய் உட்பட சில உணவுப் பொருட்களையும், அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உரிய சுகாதார முறைகளைப் பேணி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பை அடுத்தே, ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட வேண்டுமெனவும், அதிகாரிகள் பணித்துள்ளனர்.

மேலும், குறித்த ஹோட்டல் உமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு, சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில், சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில், மனித பாவனைக்கு உதவாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.