மட்டக்களப்பு மாவீரர் தினத்திற்கும் பொலீஸ் சோதனைச் சாவடி மீதான தாக்குதலுக்கும் தொடர்வு உண்டா? நேரடி ரிப்போர்ட்

'புலி வருது புலி வருது' என்பவர்களுக்கும் 'புலி வரும் புலி வரும்' என்பவர்களுக்கும்  கடந்த  வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்ற சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

30.11.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மட்டக்களப்பு வவுணதீவு வீதிச் சோதணைச் சாவடியில் கடமையில் இருந்த இரு பொலீஸ்  உத்தியோகத்தர்கள்  மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் பொலீஸ் சோதணைச் சாவடி ஒன்றின்  மீது நடத்தப்பட்ட முதலாவது  துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளினை வடகிழக்கில் உள்ள தமிழர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்து இரண்டு நாட்கள் நிறைவடைவதற்குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்  தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச  உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடந்துள்ள  இந்த  தாக்குதல்  சம்பவம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் தங்களது இனவாத சிந்தனைகளையும் புலி வருது புலி வருது என்ற பூச்சாண்டி கதைகளை  மீண்டும்  உருவாக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

'நல்லா இருந்த ஊரும் நாலு பொலீஸ் காரரும்' என்ற கதையாக இன்று மட்டக்களப்பின் நிலை மாறியுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன? இரண்டு பொலீசாரும் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்கள்? இந்த  படுகொலைக்கான காரணங்கள்  என்ன? இதனை யார் செய்திருப்பார்கள்? என்ன நோக்கத்திற்காக இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்? மாவீரர் நாளுக்கும் இவர்களது படுகொலைக்கும் தொடர்பு உண்டா? நாட்டின் அரசியல் குழப்பத்திற்கும் இந்த கொலைகளுக்கும் இடையில் சம்பந்தம் உண்டா? கருணா அம்மானுக்கு இந்த கொலையில் சம்பந்தம் உண்டா? இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன? இதனை செய்தவர்களின் அரசியல் பின்னணி என்னவாக இருக்கலாம்? என்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியில் உள்ள யுத்த காலத்தில் பெயர் பெற்ற இராணுவ முகாம் அமைந்திருந்த  வலையிறவு பாலம் என்று அழைக்கப்படும் நீண்ட  பாலத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த வவுணதீவு பொலீசாரின் வீதிச் சோதணைச் சாவடியில் வழமை போன்று மூன்று பொலீசார் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

புதூர் விமான படை முகாமில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தூரத்திற்கும் வவுணதீவு பொலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குறித்த பொலீஸ் சோதனைச் சாவடி மட்டக்களப்பு நகரில் இருந்து வலையிறவு பாலத்தை கடந்து சென்றால் வலப்பக்கம் கொக்கட்டிச்சோலைக்கும் இடப்பக்கம் வவுணதீவு பொலீஸ் நிலையம் ஊடாக ஆயித்தியமலைக்கு செல்லும் இருவீதிகள் ஒன்றினையும்  சந்தியில்  அமைந்துள்ளது.

குறித்த பொலீஸ் சோதனைச் சாவடிக்குள் கடந்த 30.11.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்து  1.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள்  உட்புகுந்த இனம் தெரியாத  குழு ஒன்று அங்கு காவல் கடமையில் இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து  தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு பொலீஸ் உத்தியோகத்தரில் ஒருவர் தமிழர் எனவும்  மற்றையவர் சிங்களவர் எனவும்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க பிரசன்ன(34) மற்றும் கல்முனை பெரிய நீலாவனையை சேர்ந்த கணேஷ் தினேஷ்(28) என்ற இரு பொலீஸ் உத்தியோகத்தருமே சம்பவத்தில்  பலியாகியுள்ளனர்.

சோதனைச் சாவடியின் வெளியே நின்ற  தினேஷ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் சடலம் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் முகம் குப்பரப் போடப்பட்டு பிடரியில் துப்பாக்கியால் சுடப்பட்டு முகப் பகுதி சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  பிரசன்ன என்ற சிங்கள பொலீஸ் உத்தியோகத்தரின் சடலம் சோதனைச் சாவடிக்குள் நெஞ்சு பகுதியில் ஆழமான மூன்று கத்தி குத்தும் கழுத்து பகுதி மற்றும் கை உடல் பகுதிகளில் பதினைந்துக்கு மேற்பட்ட கத்தி வெட்டு காயங்களுடன் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் கொல்லப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் நீண்ட நேரம் கைகளால் சண்டை செய்து தங்களை தற்காத்துக் கொள்ள போராடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சோதனைச் சாவடிக்கு வெளியே நின்ற  தினேஷ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் விரல்கள் உடைந்துள்ளதுடன் அவரது நகங்களுக்குள் கொலையாளிகளின் இரத்த படிவுகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளமை புலனாகியுள்ளது.

ரி 56 ரக துப்பாக்கிகள் பாவிப்பு!

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ரி  56 ரக துப்பாக்கியை தாக்குதல் நடத்தியவர்கள் பாவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன் பொலீசார் வைத்திருந்த ரிவால்வர் கைத்துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காத்தான்குடியில் கோப்பிக் கடை வைத்திருந்த வயோதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் ரி 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மயிரிழையில் தப்பிய பொலீஸ் உத்தியோகத்தர்?

சம்பவ தினம் கடமையில் இருந்த மற்றுமொரு தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சுகவீனம் காரணமாக பொலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து வெளியேறி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் மீது சந்தேகம் கொண்ட பொலீசார் அவரை விசாரணை செய்த போது அவர் உண்மையிலேயே சுகவீனமுற்று இருந்ததாகவும் அவர் வழமையாக  1.10  மணியளவில் கடமை முடிந்து செல்பவர் எனவும் சம்பவ தினம் வழமை போன்றே அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

அவர் சென்றதன் பின்னரே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர் செல்லும் வரை தாக்குதல் தாரிகள் காத்திருந்தார்களா? அவர் வழமையாக  வெளியேறிச் செல்வதை தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்து அவர் சென்றதன் பின்னர் தாக்குதல் நடத்தினார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கிறது.
எது எப்படி இருப்பினும் குறித்த தாக்குதல் சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்று அல்ல அது  மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கான பின்னனி காரணிகள் என்ன?

மட்டக்களப்பின் பல இடங்களில் பொலீஸ் சோதனைச் சாவடிகள் இருக்கும் போது
மட்டக்களப்பு நகரையும் படுவான்கரைப் பிரதேசத்தையும்  இணைக்கும் வலையிறவு பாலத்தில் அமைந்துள்ள பொலீஸ் சோதனைச் சாவடியை தாக்குதல் தாரிகள் தங்களது இலக்காக தேர்ந்தெடுத்து ஏன்?

அதுவும் இராணுவம் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு தரப்புகள் இருக்கும் போது பொலீசாரை தாக்குதல்  இலக்காக தாக்குதல் தாரிகள் தேர்ந்தெடுத்தது ஏன்? அதுவும் வவுணதீவு பொலீசாரை குறிவைத்தது ஏன்? என்ற கேள்விகள் எழுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் சூத்திரம் ஒன்று உண்டு என்பதை பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படும்  விசாரணைகள் மூலம் தெரிய வர வாய்ப்புள்ளது.

மாவீரர் தினத்தை நோக்கி திரும்பும் விசாரணைகள்!

தாக்குதல் சம்பவத்தை உடனடியாக  தாண்டியடி மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடும் வகையில் விசாரணைகள் நகர்வதை அவதானிக்க முடிகின்றது.

அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றதோ இல்லையோ என்பதை பாதுகாப்பு தரப்பினர் தான் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் அந்த விசாரணைகள் சரியான பாதையில் செல்கிறதா? என்ற கேள்விகளும் எழுகிறது.

பொலீசார் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாகவே தாண்டியடி மாவீரர் தினத்தை முன்நின்று நடத்திய சிலரை விசாரணைக்காக அழைத்து அதில் அஜந்தன் என்பவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாண்டியடி மாவீரர் தின நாள் நடைபெற்ற சமயத்தில் வவுணதீவு பொலீஸாருக்கும் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற படியால் இந்த சம்பவத்தை மாவீரர் தினத்தை நடத்தியவர்கள் உடன் முடிச்சுப் போட சிலர் முனைகின்றனர்.

குறிப்பாக சிங்கள இனவாத ஊடகங்களும் இனவாத அரசியல் வாதிகளும் இந்த சம்பவத்தை மீண்டும் புலி வருது என்ற வகையில் அடையாளப்படுத்த முனைவதை அவதானிக்க முடிகின்றது.

அதற்கு ஏற்றால் போல் பாதுகாப்பு தரப்பினரும் செயற்படுவது தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்தவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முடிச்சுப் போட்டு கைது செய்யும் நிலை உருவாக்கப்படுகிறது என்ற அச்சம் நிலவுகிறது.

துருவி துருவி விசாரணைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் போராளிகள்!

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வவுணதீவு பிரதேசத்தில் உள்ள  முன்னாள் போராளிகள் பலரை பாதுகாப்பு தரப்பினர் அவர்களது வீடுகளுக்கு சென்று  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.  வழமை போன்று இந்த சம்பவத்தை முன்னாள் போராளிகள் மீது சுமத்தி அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்போகிறதா என்ற பயம் சகல முன்னாள் போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அவசர அவசரமாக வருகை தந்த பொலீஸ்மா  அதிபர்!

வவுணதீவு பொலீசார் மீதான தாக்குதலை தொடர்ந்து அவசர அவசரமாக  பொலீஸ் மா அதிபர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் மாவட்ட பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட பொலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.



பொலீஸ் மா அதிபரின் மட்டக்களப்பு விஜயம் வவுணதீவு சம்பவம் தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்து காட்டியுள்ளது.

கருணா மீதான குற்றச்சாட்டு!

வவுணதீவு சம்பவத்திற்கும் கருணா அம்மானுக்கும் இடையே  தொடர்வுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின பண்டார பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். 
ஆனால் அதனை கருணா அம்மான் மறுத்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்களின் படி வவுணதீவு தாக்குதல் சம்பவத்திற்கும் தாண்டியடி மாவீரர் தினத்திற்கும் இடையே தொடர்வு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.

மறு புறம் குறித்த தாக்குதல் சம்பவம் சட்டவிரோத  கடத்தல்காரர்களின் செயற்பாடாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருப்பினும் தாங்கள் குற்றவாளிகளை  நெருங்கி விட்டதாகவும் இன்னும்  ஒரு வாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனவே வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடி மீனாத தாக்குதல் சம்பவத்தின் சூத்திரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதற்காண காரணங்கள் என்ன? கொலையாளிகள் யார்? போன்ற விடயங்கள் வெளிவரும் போது இந்த தாக்குதல் சம்பவத்தின் உண்மை உலகிற்கு தெரியவரும்.

அதுவரை குறித்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் பலி எடுக்கப்பட்டார்களா? பலி கொடுக்கப்பட்டார்களா?  என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.