வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை –அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுபகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வர்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர்,புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன,டினேஸ் என்னும் இரணடு பொலிஸ் உத்தியோகத்தர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் உத்தரவிட்டார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சம்பவம் காரணமாக வவுணதீவுப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலமையேற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.