நேர்த்தியாகவும் முன்மாதிரியாகவும் நடந்தேறிய மாணவர் பாராளுமன்ற அமர்வு.



மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வானது 28.11.2018 அன்று புதன்கிழமை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.க.பகீரதன் (அதிபர்) அவர்களின் தலைமையில் பிரதி செயலாளர் நாயகங்களான திரு.து.முரளிதரன் (பிரதி அதிபர்), திரு.சி.சிறிதரன் (பிரதி அதிபர்) ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் பாடசாலை நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது. 

பாடசாலை மாணவ மாணவியருக்கு சனநாயகம், அதன் பொறுப்புக்களும் வகைகூறலும் என்பன பற்றியும் சட்டத்தின் ஆதிபத்தியம், வாக்கு, வாக்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் செய்முறை அறிவைப் பெறுவதற்குரிய வழிகளைத் திறந்து, உரையாடல், இணக்கப்பாடு, ஏனையோரின் கருத்துக்களுக்குச் செவிமடுத்தல் மற்றும் பெரும்பாலோரின் இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளல் போன்ற திறமைகளையும் மனப்பாங்குகளையும் வழங்கி, பரந்துபட்ட சமூக ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் பாடசாலைகளில் கல்வி அமைச்சின் பணிப்புரையின் பெயரில் மாணவர் பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

80 உறுப்பினர்களை கொண்ட இவ் மாணவர் பாராளுமன்றத்திற்கு சபாநாயகராக செல்வன் வி.சர்மிலராஜ் செயற்பட்டதுடன், பிரதமராக செல்வன் சி.பிரதிப்கண்ணா, சபை முதல்வராக செல்வன் விதுசன், பிரதி சபாநாயகராக செல்வி செ. கேணிதா ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

அதிபர் அவர்களின் ஆசியுரையுடன் பிரதிநிதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றது.

முற்பகல் 11.01 ஆரம்பமாகிய சபை நடவடிக்கைகள் பிற்பகல் 12.30 வரை இடம்பெற்றதுடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சபை முதல்வர் அவர்களால் 2019 மாசி மாதம் முற்பகல் 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு சபை அமர்வு நிறைவுற்றது.