“வன்முறைகளற்ற வீடும்,நாடும் எமக்கு வேண்டும்” கவன ஈர்ப்பு போராட்டம்

வன்முறைகளற்ற வீடும்,நாடும் எமக்கு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது லேடிமெனிங் வீதியில் இருந்து மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியூடாக இந்த கவன ஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.

அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த போராட்டங்களில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,பெண்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவேண்டும்,நாட்டில் நிலையான அரசியல் நிலமை ஏற்படுத்தவேண்டும்போன்ற கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை பெண்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மிளகாய்த்தூள் தாக்குதல் செயற்பாட்டினை கண்டித்து மிளகாய்களை கோர்வையாக கட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ஏந்தியிருந்தனர்.

சமூக அபிவிருத்தியையும் பெண்களையும் கடுமையாக இந்த அரசியல் நெருக்கடி பாதிக்கும் நிலை காணப்படுவதனால் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

பெண்கள் மீதான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16நாள் செயல்வாதமானது நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பித்து சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி முடிவடைகின்றது.அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறையினையும் இல்லாதொழி;க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.