மாவட்ட சமுர்த்தி தலைமையகத்தில் தீ –சந்தேகம் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சமுர்த்தி தலைமையகத்தில் ஏற்பட்ட தீ தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இந்த தீவிபத்து இடம்பெற்றதாகவும் இதன்போது பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்ரும் மேற்கொண்டுவருகின்றனர்.

மின்னொழுக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா நாசகார செயலா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சமுர்த்தி திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சமுர்த்தி திணைக்களத்தினை பொறுப்பெடுத்துள்ள சமுர்த்தி பணிப்பாளர் கடந்த காலத்தில் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.