பிரதியமைச்சர் வியாழேந்திரன் தனது பதவியை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் எம்முடன் இணையவேண்டும்

தமிழ் மக்களின் போராட்டத்தினையும் கோரிக்கையினையும் புறந்தள்ளி பிரதியமைச்சராக அரசாங்கத்துடன் இணைந்துள்ள பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பதவினை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படமுன்வரவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்ததாகவும் அதற்கு மதிப்பளித்து அவர் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வரவேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்ப்பினை கவனத்தில் கொள்ளாத நிலையிருந்துவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

19வது அரசியலமைப்பு சட்டத்தினை மீறும் வகையில் கடந்தகால செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் காரியாலயத்தில் இன்று பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தியது.

இதன்போது அரசாங்கத்தரப்பிற்கு பிரதியமைச்சர் பதவியைப்பெற்றுசென்ற பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமது அமைச்சு பதவியினை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் தம்முடன் இணைந்து செயற்படமுன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான டெலோவின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளோட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மண்முனை மேற்கு பிரதேசபையின் பிரதி தவிசாளருமான செல்லத்துரை,தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா ஆகியோர் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது அண்மையில் சுமந்திரன் அவர்கள் ஜனாதிபதியை முறையற்ற வார்த்தை பிரயோகங்களினால் குறிப்பிட்டு உரையாற்றுவது தொடர்பிலும் ஊடகவியலாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,ஜனாதிபதியின் செயற்பாட்டினால் வந்த கோபம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செய்த நம்பிக்கை துரோகத்தினால் ஏற்பட்ட கோபதே தவிர அவரை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.