யானையின் வாலை பிடித்து தொங்கியே கூட்டமைப்பு பயணிக்க விரும்புகின்றது - பிரசாந்தன்

யானையின் வாலில் தொங்கியே தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்க விரும்புவதாகவும் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்கள் கரிசனையினை காட்டவில்லையெனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும்போது ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்துள்ள நிலையில மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும் என இவர்களினால் ஏன் நீதிமன்றம் செல்லமுடியவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நிலவும் இந்த நாட்;டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடருமானால் இந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலை காணப்படுகின்றது.நாட்டில் ஏற்படும் குழப்ப நிலையினை நீக்கி ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்கே மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

கடந்த 60வருடமாக பல போராட்டங்களை தமது உரிமைக்காக போராடிவரும் நிலையில் தொடர்ந்து அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் ஏமாற்றிவரும் நிலையே இருக்கின்றது.குறிப்பாக தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் நாங்கள் எங்களுக்கு வாக்களிங்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வினைப்பெற்றுத்தருவோம் என்று கூறி வாக்குகளைப்பெறும் தமிழரசுக்கட்சியினர் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் நிலையே அதிகளவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தல்களில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.கடந்த மூன்றரை வருட நல்லாட்சிக்கு பல முட்டுக்கொடுப்புகளை செய்தனர்.ஆனால் அதன் மூலம் தமிழர்களுக்கு எந்தவிதமா தீர்வினையும் பெற்றுக்கொடுக்கமுடியவில்லை.

இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு தீர்வினைப்பெற்றுகொள்வார்கள் என சர்வதேச சமூகமும் வடகிழக்கு மக்களும் எதிர்பார்த்தனர்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் எந்தவிதமான உறுதிப்பாடையும் பெறாமல் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் வகையில் யானையின் வாலை பிடித்தும் தொங்கும் செயற்பாடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க படும் ஆவேசத்தினை விட ஐக்கிய தேசிய கட்சியை தக்க வைப்பத்தில் சுமந்திரன் உறுதியாக இருந்துவருகின்றார்.தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் எந்த முனைப்பினையும் அவர்கள் செய்யவில்லை.

வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவோ ஜனநாயக விரோத செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றபோது கண்டுகொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சபாநாயகருக்கு எதிராக ஜனநாயக விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிவருகின்றனர்.வாய்க்கு வந்ததையெல்லாம்பேசிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினை பலப்படுத்துவதற்கு மாத்திர் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு இரண்டரை வருடங்களாகின்றது.வடமாகாணசபை கலைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசாங்கத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களின் வாலை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றனர்.ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும்போது ஜனநாயக இறைமைகள் பாதிக்கப்படுவதாக கூறி நீதிமன்றம் செல்கின்றீர்கள்.வடக்கு கிழக்கு மாகாணசபைகள் கலைக்கப்பட்ட நிலையில் உள்ளன,மக்களின் ஜனநாயகம் மீறப்படுகின்றது,மாகாணசபை தேர்தலை நடாத்துங்கள் என்று எந்த நீதிமன்றமும் செல்ல தயாராக இல்லாத நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

மாகாணசபைகளை நடாத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்ற உள்ளாந்த செயற்பாடுகளை செய்யவேண்டும்,அதற்காக பாராளுமன்றத்தில் ஒரு ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தவேண்டும்.
தமிழீழம் பிரகடனம் செய்யும்பொது இந்த நாட்டின் இறைமையினைப்பற்றி சிந்திக்காதவர்கள்,முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக பொதுமக்களும் போராளிகளும் கொல்லப்பட்டபோது நாட்டின் இறைமை பற்றி சிந்திக்காதர்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு கூஜா தூக்கும் நிலையினை எடுத்துவருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டியை பேரம்பேசி பெறுவதற்கான சாதகமான சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.இந்த சூழலை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான நிலைமையான இருப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு சிறுபான்மை தலைமைகள் முன்வரவேண்டும்.