விசேட கூட்டத்திற்கு இரண்டரை மணிநேரம் தாமதமாக ஆளுனர் –கடுப்பாகிய அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெள்ள நிலைமை தொடர்பான கூட்டத்திற்கு ஆளுனரின் வருகை தர தாமதமானமையினால் சுமார் இரண்டரை மணிநேரம் அதிகாரிகள் காத்திருந்த சம்பவம் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள்,பிரதேசசபை தவிசாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,உள்ளுராட்சி ஆணையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் 10.30க்கே மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்துவிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தவேளையில் அதிகாரிகள் தமது பகுதிகளில் இருக்கவேண்டிய நிலையில் ஆளுனரின் பணிப்புரைக்கமைய குறித்த கூட்டத்திற்கு வருகைதந்திருந்தனர்.

ஆனால் கிழக்கு மாகாண ஆளுனர் 1.30மணியளவிலேயே குறித்த கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர்.

நிலமையினை கவனத்தில் கொள்ளாது ஆளுனர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டமை தொடர்பிலும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.