ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு கௌரவிப்பு நிகழ்வு

ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்தும் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு, கலைஞர்கள் கௌரவம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களின் அறிமுகம் ஆகியனகொண்ட கௌரவிப்பு நிகழ்வு நேற்று(08-10) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினமான சிவம் பாக்கியநாதன் தiiமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ்,மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியான் தேவாலய பிரதம குரு அருட்தந்தை தி.லோரன்ஸ், கோட்டைமுனை யூசூபியா பள்ளி வாசல் பிரதம இமாம் ஏ.ஜே.எம். இலியாஸ் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோரும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி எஸ்.அன்புதாசன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்..சண்முகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக இலங்கை (கொழும்பு) விஸ்வகர்ம சங்கத் தலைவர் எஸ். செல்வரட்ணம், மட்டக்களப்பு, கொழும்பு சொர்ணம் குழுமங்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் எம். விஸ்வநாதன், பண்டாரவளை விஸ்வகர்ம நல உரிமைச் சங்கத் தலைவர் ஆ.வரதராஜஆகியோரும் கலந்து சிறப்பத்தினர்.

இந்நிகழ்வில் கிழக்கு, யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, றுகுணு, கொழும்பு, களனி, மொறட்டுவ மற்றும் ஊவாவெல்லச ஆகிய பல்கலைக் கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணமும் பாரட்டு விருதும் வழங்கப்பட்டன.

2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தினர்களுக்கான அறிமுகமும் மற்றும் கௌரவமும் இதன்போது வழங்கப்பட்டது.

அத்தோடு இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் இலங்கை முதல் சர்வதேசம் வரை இசைத் துறைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பின் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த சங்கீத ஆசிரியை சாந்தினி தர்மநாதன் (சங்கீதம்),சிங்கப்பூர் அப்சராஸ் கலையக நடன விரிவுரையாளரும் மற்றும் சர்வதேசத்தில் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கி கலை ஆர்வலர்களிடம் தனக்கென ஓர் தனியான தடம்பதித்த பரதநாட்டியக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜா(நடனம்),இலங்கை வானொலி, தேசிய பத்திரிகைள் மற்றும் சஞ்சிகைகளில் தனது கவிதை ஆக்கங்களைப் பிரசுரித்து கவியரங்குகளையும் நடாத்தி மற்றும் கொழும்பு செட்டியார் தெருவில் நகைகளை வடிவமைப்பதில் சிறந்து விளங்கிய பாண்டியூர் பொன் நவநீதன் (கவிதை),மற்றும் மீன்பாடும் தேனாட்டிற்கு புகழ் சேர்த்த முழக்கம் முருகப்பா இம்மண்ணிற்குச் செய்த பணியை நினைந்து நாட்டிய வித்தியா நடனப் பட்டறையின் மிருதங்கப் பயிற்றுனராக கடமை புரிந்து வரும் மிருதங்க வித்துவான் இரா நித்தியானந்தன் (மிருதங்கம்)ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் இதன்போது விஸ்வகர்ம சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இளைஞர்கள் அரச தொழிலை விடுத்து தனியார் துறையின் பக்கம் சார்ந்து போட்டித்தன்மையான நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தனியார் துறையில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என இதில் அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.