நகர்ப்புறத்திற்கு சவால் விடுத்த நகர்ப்புற மாணவன் - படுவான்கரைக்கு புகழ் சேர்த்து சாதனை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலையொன்றின் மாணவன் மட்;டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளான்.

கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக படையெடுக்கும் இந்த காலத்தில் நகரில் இருந்து பின்தங்கிய பகுதிக்கு வந்து கல்வி கற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை அரசியல் தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் தரம் கற்ற ஜெயராஜா துகின்ரறேஸ் என்னும் மாணவனே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப்பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மாவட்டத்திலும் மாகாணத்திலும் முதல் இடம்பெற்ற முதல் சாதனையாக இந்த மாணவனின் சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் தாயார் குறித்த பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் ஒவ்வொரு நாளும் தாயாருடன் மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 15கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலையிலேயே தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் செல்வி கே.கனகசூரியம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கரிகரராஜ் மாணவனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

தான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்புவதாக சாதனை படைத்த மாணவன் ஜெயராஜா துகின்ரறேஸ் தெரிவித்தார்.

இந்த மாணவனின் சாதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வளங்கள் குறைந்த ஒரு பாடசாலையில் முதன்முறையாக வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக பெற்று ஒரு வரலாற்று சாதனையினை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கரிகரராஜ் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் ச.குகநாதன் வாழ்த்து தெரிவித்து மாணவனுக்கு பரிசும் வழங்கிவைத்தார்.