புளியந்தீவு தெற்கு வட்டாரம் அபிவிருத்தியில் பின்தள்ளப்படுகின்றது…




நகர்ப்பகுதி என்ற போர்வையில் புளியந்தீவு தெற்கு வட்டாரம் அபிவிருத்தியில் பின்தள்ளப்படுகின்றது…

(மாநகரசபை உறுப்பினர் - அ.கிருரஜன்)

அரச நிறுவனமோ, அரச சார்பற்ற நிறுவனமோ புளியந்தீவு ஒரு நகர்ப் பிரதேசம் என்று சொல்லி ஓரங்கட்டப்படுவதன் மூலம் புளியந்தீவு தெற்குப் பகுதி மேலும் மேலும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. எனவே மாநகரசபையினூடாக திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது புளியந்திவு தெற்கு வட்டாரத்தினையும் எல்லைப்புற பிரதேசம் போல் கணித்து அதற்கான அபிவிருத்திகளை அதிகரிக்க வேண்டும் என மாநகரசபையின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார்.

மாநகரசபையின் 10வது அமர்வில் மாநகரசபை உறுப்பினர்களுக்கான தனிநபர் உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது கன்னியுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாநகரசபை எல்லையில் புளியந்தீவு தெற்கு பிரதேசமானது ஓரளவு அபிவிருத்தியைக் கொண்ட பிரதேசமாகவே காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் சல்லிப்பிட்டி மற்றும் மாணிக்க சதுக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் அபிவிருத்தி தேவைப்பாடுகளை அதிகம் கொண்ட பகுதிகளாகக் காணப்படுகின்றன. புளியந்தீவு நகர்ப் பகுதி என்ற போர்வையில் அந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. எந்த அரச நிறுவனமோ, அரச சார்பற்ற நிறுவனமே புளியந்தீவு ஒரு நகர்ப் பிரதேசம் என்று சொல்லி ஓரங்கட்டப்படுவதன் மூலம் புளியந்தீவு தெற்குப் பகுதி மேலும் மேலும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

எனவே மாநகரசபையினூடாக திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது புளியந்தீவு தெற்கு வட்டாரத்தினையும் எல்லைப்புற பிரதேசம் போல் கணித்து அதற்கான அபிவிருத்திகளை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த சபையில் எனது வேண்டுகோளாக விடுக்கின்றேன்.

மாநகரசபையின் இதயப்பகுதியாக உள்ள புளிந்தீவு பகுதியானது பல பாடசாலைகள், ஆலயங்கள், அரச நிறுவகங்கள் சுற்றுலா மையங்கள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு இப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றார்கள். எனவே இந்தப் பிரதேசத்தினை அழகுடனும் சுத்தத்துடனும் பேணுவது மாநகரசபையின் மகத்தான சேவையாகும். எனவே புளியந்தீவுப் பகுதிக்கான ஊழியர்களை மேலும் அதிகரிப்பதன் ஊடாக இப்பகுதியின் அழகையும் சுத்தத்தையும் இன்னும் பேண முடியும்.

எமது மாநகரசபை முதண்மை மாநகரசபையாக வேண்டும் என்கின்ற சிந்தனையே அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. ஆனால் எனது சிந்தனை எனது வட்டாரம் இந்த மாநகரசபையில் முதண்மை வட்டாரமாகத் திகழ வேண்டும் என்பதே. இவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர்களும் சிந்தித்து தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்வோமாக இருந்தால் தானாகவே இந்த மாநாகரம் முதண்மை மாநகரம் என்ற இலக்கினை அடைந்துவிடும் என்று தெரிவித்தார்.