சவுக்கடி இரட்டைப்படுகொலை –நீதிவேண்டி போராட்டம்

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் படுகொலைசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்க மரண தண்டனை வழங்க கோரியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகவேண்டாம் என்று வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய சவுக்கடி பிரதேச மக்கள் மற்றும் ஏனைய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

26-10-2017அன்று தாயும் மகனும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் சவுக்கடியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் கொள்ளையிடப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்துவரும் நிலையிருந்துவருகின்றது.

தற்போது குறித்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரை பாதுகாப்பதற்கு சில சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதனை அவர்கள் கைவிடவேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கெடுத்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

குறித்த கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி இன்னுமொரு தடைவ இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாத வகையில் சட்டத்துறை நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.