மட்டக்களப்பில் உளநல தினத்தினை முன்னிட்டு கண்காட்சியும் விழிப்பூட்டலும்

எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவில் சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு உளநல நிலையமும் வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவும் இணைந்து இந்த மாபெரும் கண்காட்சியையும் உளநல விழிப்பூட்டல் நிகழ்வினையும் நடாத்தவுள்ளது.

மாறுகின்ற உலகில் இளம்பராயமும் அதன் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் இம்முறை இந்த சர்வதேச உளநல தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு உளநல நிலையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு உளநல நிலையம் வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்கா ஆகியவற்றின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம்,மட்டப்பு உளநல நிலையத்தின் இணைப்பாளர் இ.ஜு.சில்வஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

அண்மைக்காலமாக வடகிழக்கில் உளவியல் தாக்கம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இளம்பராயத்தினர் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தெரிவித்தார்.
                                      
1993ஆம் ஆண்டு எங்கள் உளநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.இப்பகுதியில் உடல்உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.அந்த காலப்பகுதியில் இப்பகுதியில் உளவளம் இல்லாத நிலையில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 30வருடமாக உளநல பணியை மேற்கொண்டுவருவதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.