சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது –வியாழேந்திரன் எம்.பி.

சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பரிசளிப்பு விழா,சிறுவர்முதியோர் தினம்,ஆசிரியர் தினம் ஆகியவற்றினைக்கொண்டதாக முப்பெருவிழா இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது பாடசாலையில் பல்வேறு சாதனைகளையும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறுவர்கள்,முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் முதியோர் மற்றும் சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் தின நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது அதிதிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.ஊடகவியலாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த வாரம் வடகிழக்கு செயலணியின் கூட்டம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக டிசம்பர் மாத இறுதிக்குள் வடகிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பு மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.ஜனாதிபதி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகின்றோம்.

வடகிழக்கில் சில பகுதிகளில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.ஆனால் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.தனியார் காணிகள்,பாடசாலை காணிகள்,வாழ்வாதார காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை காணிகள்,ஆசிரிய பயிற்சி வளநிலையத்திற்கான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.பல தனியார் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.ஜனாதிபதி டிசம்பர் மாதத்திற்கு முன்பாக காணிகளை விடுவிப்பதாக கூறியுள்ளார்.

இந்த நாட்டின் சிறுபான்மை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட இந்த ஜனாதிபதிக்கு அந்த சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.அதற்கான அழுத்தங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக வழங்கிவருகின்றது.சில விடயங்களில் வெற்றியும் கண்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் என்பவர்கள் ஒரு இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துசென்றவர்கள்.மகிந்த ஆட்சிக்காலத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் புனர்வாழ்வு அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.நூறுக்கு உட்பட அரசியல் கைதிகளே கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.வாழ்வா சாவா என்ற ரீதியில் உண்ணாவிரத போராட்டங்களை நிறையில் நடாத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நாங்கள் இன்று முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த நாட்டின் நல்லாட்சி அரசாங்கம்,ஜனாதிபதி,பிரதர் ஆகியோர் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.தொடர்ச்சியான அழுத்தங்களை பாராளுமன்ற அமர்வில் இருந்து வழங்கவிருக்கின்றோம்.

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் 65 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.இந்த அரசாங்கம் தார்மீகசிந்தையுடன் இந்த அரசாங்கம் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும்.ஜனாதிபதி அவர்கள் கூடிய கவனம் எடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும்.

புல்லுமலை விவகாரத்தினை இன்று சிலர் இனவாதமாக பார்க்கின்றனர்.இது ஒரு இனத்திற்கான விடயம் அல்ல.அப்பகுதியில் நிலத்தடி நீரை உறுஞ்சி போத்தலில் அடைத்து விற்க முற்படும் நிறுவனத்திற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இது இனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல,ஒரு சமூகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல,இந்த மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதிய போராட்டம்.இது தொடர்பில் நாங்கள் நடாத்திய போராட்டங்களில் எல்லாம் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டனர்.

புல்லுமலை தொழிற்சாலையின் நிறுவனம் மற்றும் அது சார்ந்த அரசியல்வாதிகள் அதற்கு எதிரான போராட்டங்களை ஒரு இனத்திற்கு எதிரான போராட்;டமாக காட்டி அதில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கின்றனர்.எங்களிடம் எந்த இனவாதமும் இல்லை.

நாங்கள் எங்கள் சகோதர இனமான முஸ்லிம்களை நேசிக்கின்றோம்,சிங்கள மக்களை நேசிக்கின்றோம்.நீங்கள் தனித்துவமாக வாழ்வதுபோல நாங்களும் தனித்துவமாக வாழ்வதற்கே ஆசைப்படுகின்றோம்.