சிறுபான்மை கட்சிகள் நிலமையினை சாதகமாக பயன்படுத்தவேண்டும் -தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையினை சிறுபான்மை சமூகம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையினை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகின்றார்கள் என்பதிலேயே தமிழர்களின் எதிர்கால தலைவிதி காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாடு அதளபாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய பிரதமரை தனது அதிகாரங்களை பயன்படுத்தி நியமித்துள்ளதாகவும் பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஆட்சி இந்த நாட்டுக்கு பொருத்தம் இல்லையென்பதை ஜனாதிபதி நன்கு உணர்ந்தே இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சியை அமைத்தபோது எதனைஎதனை எல்லாம் செய்யப்போகின்றோம் என்று தெரிவித்து மக்களிடம் வாக்குகளைப்பெற்றார்களோ எதனையும் செய்யாது மோசடியும் விலைவாசி அதிகரிப்பும் என நாடு பாதாளத்திற்கே சென்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் எதனையும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவியினை வழங்கியுள்ளார்.

இது சரியா தவறா என வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றாலும் ஏற்பட்டுள்ள இந்த சூழலை சிறுபான்மை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

1960ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு அரசியல் சூழ்நிலையேற்பட்டபோது அன்று அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலேயே இன்று தமிழ் மக்கள் இன்று பல்வேறு இழப்புகளை எதிர்கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

தமது சமூகத்தின் இலக்கினை அடைவதற்காக அரசியல் தலைமைகள் கிடைக்கும் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.சிறுபான்மை அரசியல் தலைமைகளுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகின்றார்கள் என்பதிலேயே தமிழர்களின் எதிர்கால தலைவிதி காணப்படுகின்றது.

இதேநேரம் கடந்த நான்கு வருடமாக கிழக்கு மாகாணத்தில் குடும்பங்களை தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லையென இங்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலேயே அதிகளவான உதவிகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.