வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான இரண்டாவது ஜனாதிபதி செயலணிக் கூட்டம் (03.10.2018)



(விளாவூர் நிருபர்)

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி தலைமையிலான இரண்டாவது செயலணிக் கூட்டம் இன்று(03.10.2018) பராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த செயலணிக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்நோக்கப்படும் பல பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டன. உன்னிச்சை குளத்தை அண்டிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கலை துரிதப்படுத்துதல், வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீள இயங்கச் செய்வதற்கான அமைச்சரவை அனுமதியினை பெறுதல், தேவபுரம் அரிசி ஆலையினை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், கற்கை நிலையங்களில் தங்கியிருக்கும் படையினரை விலகச் செய்தல், படையினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் ச.வியாழேந்திரன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலையினால் பிரதேசத்தில் ஏற்படப் போகும் வரட்சி தொடர்பாகவும், மக்களது எதிர்ப்பு தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விளக்கமாக எடுத்துரைத்தார். சீ.யோகேஸ்வரன் மற்றும் ச.வியாழேந்திரன்  ஆகியோரும் தமது அதிருப்தியை வெளியிட்டனர். கிழக்கு மாகாண ஆளுநர், பிரதி அமைச்சர் ஸ்ரீயாணி விக்ரமரெட்ன, பிரதி அமைச்சர் இ.அங்கஜன் ஆகியோரும் இந்த குடிநீர் தொழில்சாலை அமைப்பதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். ஜனாதிபதி இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டதோடு, இதே போன்ற காரணத்தால் எதியோப்பியாவில் ஏற்பட்ட வரட்சியினை நினைவு கூர்ந்ததோடு, இந்த தொழிற்சாலை தொடர்பாக மீளாய்வு செய்து, நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்தார்.
வடக்கு மாகாணம் தொடர்பாக ஆனையிறவு உப்பளம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போன்றவற்றை மீள இயங்கச் செய்தல் மடுப்பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தல், தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்தல், பனை வளத்தினை அடிப்படையாகக் கொண்ட திக்கம் வடிசாலை, அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, ஓட்டுத்தொழிற்சாலை அமைத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.