ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான பெண்கள் அமைப்பு அங்குரார்ப்பணம்

(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதிக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பெண்கள் அமைப்பு நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

குறித்த நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெண்கள் அமைப்பு செயலாளர் சந்திரிகா டி சொய்சா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மேல் மாகாண முதலமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சதீஷ், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டி எம் சந்திரபால மற்றும் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட 36,000 விதவைகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, வீட்டுத் திட்ட பிரச்சினை, மலசல கூட வசதி இன்மை, பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு இல்லாமை, ஏனையவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பின்மை, அங்கவீனமானவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, யானைகளால் எதிர்நோக்கும் பிரச்சினை, மருத்துவ வசதிகளில் உள்ள குறைபாடுகள், போக்குவரத்து வசதி தொடர்பான பிரச்சினை உட்பட பலவற்றை குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.