தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் தமிழ் மக்களுக்கே பாதிப்பு –வியாழேந்திரன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பாக இருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கிரான்குளம்,சீமூன் கார்டன் விடுதியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,வடமாகாணசபை உறுப்பினர் ரி.லிங்கநாதன்,கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

வடமாகாண முதலமைச்சர் விடயத்தில் மிகவும் கவனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதில் எங்களுடைய கட்சி தலைமை மிகவும் கவனமாக இருந்துவருகின்றது.வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கவேண்டும்,அவர் வெளியேறிச்செல்லக்கூடாது என்பதில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மிகவும் கவனமாக இருக்கின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவினை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் வடமாகாண முதலமைச்சர் வெளியேறினாலும் அந்த கட்சிகளுக்கு பாதிப்பில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பாக இருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அமையும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை வலுப்படுத்தி,பலப்படுத்தி,கொள்கையுடன் இணைந்து செல்லக்கூடியவர்களை இன்னும் உள்வாங்கிக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் பயணிக்கவேண்டும்.