களுதாவளையில் மக்களுக்கு பாதகமான தொலைத்தொடர்பு கோபுரம் - ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை பிரதேசசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று பிரதேச மக்களின் எதிர்ப்பினையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தடையுத்தரவினையும் மீறி குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைத்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் குடியிருப்பு மாணவர்களின் குருகுலம் என்பன உள்ள பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதாகவும் அவற்றினை உடன தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் TRCL/NW/Guidelines/1/2017 எனும் சுற்று நிருபத்தில் 1.3 பிரிவில் இரு கோபுரங்களுக்குமான இடைவெளி 4கி.மீற்றர் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. களுதாவளையில் 4ம் குறிச்சியில் இருக்கும் கோபுரத்திற்கும் தற்போது அமைக்கபட்டு வரும் கோபுரத்திற்கும் 4.கி.மீ.தூரம் கிடையாது.

2. அதே சுற்று நிருபத்தில் 5.4 பிரிவின் கீழ் பாடசாலைகளும் ஆஸ்பத்திரிகளும் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 150 மீற்றருக்கு அப்பால்த்தான் கோபுரம் அமைக்கப்படலாம் என்றிருக்கின்றது. தற்போது அமைக்கப்படும் கோபுரம் திருஞானசம்பந்தர் குருகுலத்திற்கு அண்மையிலாகும். இது 150மீற்ரர்களை விடக் குறைவானதாகும். இங்கு 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கின்றார்கள்.

3. உலக சுகாதார அமைப்பினால் தொலைத்தொடர்புக் கோபரங்களின் பாதிப்புத் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் கதிர்வீச்சின் காரணமாக15 க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கலாம் எனக் கூறுகிறார்கள். அதில் முக்கியமாக மலட்டுத் தன்மை, புற்றுநோய், தோல் நோய்கள், இருதய நோய்கள் என்பன முக்கியமானவைகளாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச சபை கோபுரம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்காத போதும் கோபுரம் அமைக்கும் பணிகளை ஏயார்ரெல் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தின் செயற்பாடானது எமது நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கவில்லை என்பதையே காட்டுகின்றது. பொது மக்கள் ஒரு மதில் கட்டுவதற்கும் மலசலகூடம் கட்டுவதற்கும் பிரதேச சபையில் அனுமதி எடுத்தே கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிரதேச சபை சட்ட நடவடிக்கை எடுக்கும். ஆனால் இற்றைவரை பிரதேச சபை எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ஆகவே பிரதேச சபை தனக்குள்ள அதிகாரத்தினையும் சட்டத்தினையும் பயன்படுத்தி மேற்படி கோபுர கட்டுமானப் பணியினை நிறுத்துமாறு வலியுறுத்தி 17.09.2018 அன்று காலை 9.00 மணிமுதல் அமைதிவழிப் போராட்டத்தை பிரதேச சபைக்கு முன்னால் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எமது சூழலைப் பாதுகாக்கவும் பல்தேசியக் கொம்பனிகளின் அத்து மீறல்களை எதிர்க்கவும் ஆர்வமுடையவர்கள் எனது இப்போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.