களுவாஞ்சிகுடி பஸ் சாரதி,நடத்துனர் மீது வவுனியாவில் தாக்குதல் -வீதிக்கு வந்து போராடிய ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் தனியார் போக்குவரத்து ஊழியர்களினால் தாக்கப்படுவதை கண்டித்தும் தமக்கு பாதுகாப்பு கோரியும் மட்;டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நேற்று வவுணியாவில் வைத்து களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசபை சொந்தமான பஸ் மற்றும் சாரதிகள் மீது தனியார் பஸ் ஒன்றின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் வவுணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு வந்துகொண்டிருந்த களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசாலைக்கு சொந்தமான பஸ்வண்டியின் சாரதிகள் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக தாங்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருவதாகவும் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தினையும் நடாத்திய ஊழியர்கள் தனியார் பஸ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதன்போது தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் தமது ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு நீதிவழங்குமாறும் கோரும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இன்றைய பணி பகிஸ்கரிப்பு காரணமாக களுவாஞ்சிகுடி சாலையில் இருந்து எந்த பஸ்சும் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பொதுமக்களும் படுவான்கரை பகுதி மக்களும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கினர்.

படுவான்கரை பகுதிக்கான பிரதான போக்குவரத்து சேவையாகஇலங்கை போக்குவரத்துசபையே காணப்படுவதனால் அப்பகுதி மக்களும் மாணவர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டதை காணமுடிந்தது.