களுதாவளையில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரம் நிர்மாணப்பணி இடைநிறுத்தம் -ஆர்ப்பாட்டத்தின் பலன்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தியுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.

களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி களுதாவளையில் உள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

களுதாவளை 04ஆம் குறிச்சியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரத்தினால் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகளும் ஆஸ்பத்திரிகளும் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 150 மீற்றருக்கு அப்பால்த்தான் தொலைத்தொடர்புகோபுரம் அமைக்கப்படலாம் என்றிருக்கின்றது. தற்போது அமைக்கப்படும் கோபுரம் திருஞானசம்பந்தர் குருகுலத்திற்கு அண்மையிலாகும். இது 150மீற்ரர்களை விடக் குறைவானதாகும். இங்கு 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கின்றார்கள்.

உலக சுகாதார அமைப்பினால் தொலைத்தொடர்புக் கோபரங்களின் பாதிப்புத் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் கதிர்வீச்சின் காரணமாக15 க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கலாம் எனக் கூறுகிறார்கள். அதில் முக்கியமாக மலட்டுத் தன்மை, புற்றுநோய், தோல் நோய்கள், இருதய நோய்கள் என்பன முக்கியமானவைகளாகும்.

இதன்காரணமாக குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தினால் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் குறித்த தொலைததொடர்பு கோபுரத்தினை நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

பிரதேசசபை தனது அதிகாரத்தினை பயன்படுத்தி குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை பொலிஸாரின் உதவியுடன் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.