எருவில் சிவபுரத்தில் பழ அறுவடை நிகழ்வு

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேதன விவசாய பழங்கள் அறுவடை விழா மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் பகுதியில் நடைபெற்றது.

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முதல் நிகழ்வாக இந்த அறுவடைவிழா நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சிவபுரம் பகுதியில் சேதனை பசளை கொண்டு செய்கைபண்ணப்பட்ட பப்பாசி தோட்டத்தில் இந்த அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் திருமதி எஸ்.பாக்கியராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பழ அறுவடைகள் நடைபெற்றதுடன் நஞ்சற்ற வகையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.