தாமரை தடாகத்தில் வீழ்ந்து சிறுமி பலி
மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் வியாழக்கிழமை (09) மாலை வீழ்ந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா (வயது 7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மயிலம்பாவெளி -காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமானத்துறை அமைச்சர்; சஜித் பிறேமதாஸா எதிர்வரும் 13ந் திகதி வருகைதரவுள்ளார்.

இந்த வீட்டுத்திட்டத்தில் ஒரு பகுதியில் தாமரைத் தடாகம் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தடாகம் அமைக்கப்படும் பகுதியில் மாலைப் பொழுதில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

தடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.