உன்னிச்சை விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் மட்டக்களப்பிற்கு நேரடி விஜயம்…




உன்னிச்சை விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் 04ம் திகதி மட்டக்களப்பிற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார் என உன்னிச்சை விவசாயத் திட்டமுகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.

அண்மையில் உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பல ஏக்கர் கணக்கான விவசாய காணிகள் பாதிப்புற்ற விடயம் தொடர்பில் பிரதேச விவசாயிகளுக்கும் உன்னிச்சை நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சம்மந்தமாக பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றும் இன்னும் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இது தொடர்பில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களை உன்னிச்சை விவசாய திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேள் தலைமையிலான விவசாயிகள் குழுவினர் நேற்று (02) அநுராதபுரத்திலுள்ள அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது ஏற்பட்ட இடர்பாடுகள், முறுகல்கள் பற்றி அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு உன்னிச்சை பிரதேச பொறியியலாளரை மாற்றி அப்பிரதேச விவசாயிகளுடன் இணைந்து சேவையாற்றக் கூடிய ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் எதிர்வரும் 04ம் திகதி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது உன்னிச்சை பிரதேசத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டு இப்பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தார் என திட்ட முகாமைத்தவக் குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.